search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொடைக்கானல் மழை"

    கொடைக்கானலில் கடந்த 2 நாட்களாக இடை விடாமல் பெய்து வரும் கன மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. #Rain

    கொடைக்கானல்:

    கஜா புயலால் பெரிதும் பாதிப்பை சந்தித்த கொடைக்கானலில் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. இதனிடையே நேற்று முன்தினம் முதல் சாரல் மழை பெய்து வருகிறது. கடும் பனி மூட்டத்துடன் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.

    நேற்று காலை தொடங்கிய மழை இரவு வரை இடை விடாமல் கொட்டித் தீர்த்தது. இதனால் தாழ் வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படாததால் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகினர்.

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே பனி மூட்டம் அதிகமாக இருப்பதால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே செல்லும் நிலை உள்ளது. பனிப் பொழிவு அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாகவே இருந்தது.


    தொடர் மழையினால் அவர்களும் வெளியே வர முடியாமல் விடுதிக்குள்ளே முடங்கினர். இதனால் அனைத்து சுற்றுலா இடங்களும் வெறிச்சோடி காணப்பட்டது. சுற்றுலா தொழிலை நம்பியுள்ள ஓட்டல், உணவகங்கள் ஆகியவையும் களை இழந்து காணப்பட்டன.

    வத்தலக்குண்டுவில் இருந்து கொடைக்கானல் நோக்கி 50 பயணிகளுடன் ஒரு தனியார் பஸ் சென்று கொண்டு இருந்தது. நேற்று மாலை மயிலாடும்பாறை அருகே வந்த போது கடும் பனி மூட்டம் காரணமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பஸ் சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். பள்ளத்தில் இறங்கிய பஸ் ஒரு பாறை மீது மோதி நின்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இருந்தபோதும் பஸ்சுக்குள்ளேயே பயணிகள் நிலை தடுமாறி விழுந்ததால் சிலருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் பயணிகளை பத்திரமாக மீட்டதுடன் பஸ்சையும் அங்கிருந்து மேலே கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #Rain

    கொடைக்கானல் பகுதியில் கடும் பனிமூட்டத்துடன் மிதமான சாரல் மழை பொழிந்து வருகிறது. இதனால் கொடைக்கானல் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட கஜா புயல் தாக்கத்தால் சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளது.

    ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தும் மின்கம்பங்கள் சாய்ந்தும், விவசாயநிலங்கள் முற்றிலும் அழிந்தும் , கொடைக்கானல் நகர் மற்றும் மேல்மலை கீழ்மலை கிராமங்கள் முழுவதும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி மீளாத நிலையில் இன்று கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதலே கடும் பனிமூட்டத்துடன் கூடிய மிதமான சாரல் மழை பொழிந்து வருகிறது. இதனால் கொடைக்கானல் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

    கடும் பனிமூட்டம் நிலவியதால் சாலைகளில் சென்ற இருசக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் வரை முகப்பு விளக்குகளை எரிய விட்டு தவழ்ந்து சென்றன. மேலும் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த குறைந்த எண்ணிக்கையிலான சுற்றுலாப்பயணிகளும் அறைக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.

    கடும் பனி மூட்டத்துடன் சாரல் மழையும் பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும்,சிறு வியாபாரிகளின் வணிகமும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியது.

    கொடைக்கானலில் மழை நீடித்து வருவதால் பேரிடர் மீட்புக்குழு முகாமிட்டுள்ளது. #TNRain #RedAlert #NDRF

    பெருமாள்மலை:

    மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது கொடைக்கானல் மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் இங்கு கடந்த சில நாட்களாக மழை நீடித்து வருகிறது. நேற்று மதியம் முதல் மழை வெளுத்து கட்டியது. சுமார் 5 மணி நேரம் பெய்த மழையால் சாலையில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியது.

    தொடர் மழை காரமணாக கொடைக்கானல் ஏரி நிரம்பி வழிந்தது. இந்த தண்ணீர் பழனி பகுதியில் உள்ள அணைக்கு வந்து சேருகிறது. அதோடு குடிநீர் வழங்கும் நீர் தேக்கங்களின் நீர் மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.

    கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள வெள்ளி நீர் வீழ்ச்சி, பாம்பார் அருவி, வட்டக்கானல் அருவி, பியர்சோழா அருவி உள்ளிட்ட பல்வேறு அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    இந்த மழையால் கொடைக்கானல் - வத்தலக்குண்டு மலைப் பாதையில் மச்சசூர் என்ற இடத்தில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனை நெடுஞ்சாலைத்துறையினர் அப்புறப்படுத்தினர்.


    கொடைக்கானல் - பழனி மலைப்பாதையில் வெள்ளைப்பாறை என்ற இடத்தில் மண் சரிவு ஏற்பட்டது. தகவல் அறிந்த வனத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் விரைந்து சென்று அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேகமூட்டம் தொடர்ந்து காணப்பட்டதால் மலைப்பகுதியில் பகல் நேரத்தில் கூட இருள் போல் காணப்பட்டது. எனவே வாகனங்களில் செல்வோர் முகப்பு விளக்கை போட்டபடி சென்றனர்.

    இன்று வாரவிடுமுறை என்ற போதும் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாகவே காணப்பட்டது. எனவே நகர் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. கன மழை எச்சரிக்கை காரணமாக தொப்பி தூக்கும் பாறை, அமைதிச் சோலை, வாட்ச் டவர், பேரிஜம் ஏரி, பசுமை பள்ளத்தாக்கு, பில்லர் ராக், குணா குகை, மோயர் பாயிண்ட் உள்ளிட்ட வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்கள் மூடப்பட்டன.

    தொடர் மழை காரணமாக திண்டுக்கல்லில் இருந்து மீட்புக் குழுவினர் 20 பேர் கொடைக்கானல் விரைந்தனர். இவர்கள் பெருமாள் மலை பகுதியில் முகாமிட்டுள்ளனர். அங்கிருந்து வெள்ளப்பாதிப்பு ஏற்படும் இடங்களுக்குச் சென்று மீட்பு பணிகளை தொடங்க உள்ளனர்.

    கன மழை காரணமாக கொடைக்கானல் மேல்மலை கிராமமான மன்னவனூர் காலனியில் கணேசன், சரோஜா என்பவரது வீட்டின் ஒரு பகுதி இடிந்துள்ளது. தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் அங்கு விரைந்துள்ளனர். #TNRain #RedAlert #NDRF

    கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது மாறுபட்ட சீதோசனம் நிலவி வருகிறது. காலை நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்தும் மாலையில் இதமான குளிர் காற்றும் வீசி வருகிறது.

    மேலும் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று பெய்த மழையின் காரணமாக சுற்றுலா பயணிகள் அறைகளிலேயே முடங்கினர்.

    3 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் பூமி குளிர்ந்தது. வெயிலின் தாக்கம் குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயரத் தொடங்கி உள்ளது. பழனி நகருக்கு குடிநீர் ஆதாரமான பிரதான ஏரி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    இதேபோல் நகராட்சி நீர்தேக்கம், மனோரஞ்சிதம் சோலை அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தற்காலிக தீர்வு காணப்பட்டுள்ளது. விவசாயிகளும் கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், காலிபிளவர் உள்ளிட்ட காய்கறிகளை நடவு செய்துள்ளனர்.

    தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக அவை செழித்து வளரத் தொடங்கி உள்ளது. ஆப்சீசன் தொடங்க உள்ள நிலையில் சாரல் மழை பெய்து இதமான சீதோசனம் நிலவி வருவது வியாபாரிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

    அடுத்த வாரம் காலாண்டு தொடங்க உள்ளது. எனவே அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கின்றனர். அவர்களை மகிழ்விக்கும் வண்ணம் பிரையண்ட் பூங்கா மற்றும் கொடைக்கானல் நகர் பகுதிகளில் உள்ள பூங்காக்களில் புதிய மலர் செடிகள் நடப்பட்டு தற்போது பூத்து குலுங்குகின்றன.

    சுற்றுலா பயணிகளை வரவேற்க்கும் வண்ணம் பணிகளில் அதிகாரிகள் மும்முரமாக இறங்கி உள்ளனர்.

    கொடைக்கானலில் சூறாவளி காற்றுடன் சாரல் மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது.

    திண்டுக்கல்:

    கேரளா மற்றும் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது ஆப் சீசன் தொடங்க உள்ள நிலையில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. கன மழை மற்றும் போக்குவரத்து துண்டிப்பு உள்ளிட்ட காரணங்களால் கொடைக்கானலுக்கு வர பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

    கடந்த ஒரு வாரமாகவே சாரல் மழை தொடர்ந்து வருகிறது. மேலும் பலத்த காற்று வீசுவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் வருகையும் குறைந்துள்ளது. இதனால் முக்கிய சுற்றுலா இடங்களான பசுமை பள்ளத்தாக்கு, குணாகுகை, தூண்பாறை, பைன் பாரஸ்ட், பிரையண்ட் பூங்கா, நட்சத்திர ஏரி உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    குறைந்த அளவே வந்திருந்த சுற்றுலா பயணிகளும் அறைகளிலேயே முடங்கி உள்ளனர். வழக்கத்தை விட குளிர் அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்கள் வெளியே நடமாடுவதை தவிர்த்து வருகின்றனர்.

    இயல்பு நிலை திரும்பிய பிறகே சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். இதனால் வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    கொடைக்கானலில் 4 மணி நேரம் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பெருமாள்மலை:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    கடந்த வருடம் கடுமையான வறட்சி நிலவியதால் பொதுமக்கள் மட்டுமல்லாது சுற்றுலா பயணிகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. லாரிகள் மூலம் தண்ணீர் விலைக்கு வாங்கி வரப்பட்டதால் ஓட்டல் மற்றும் லாட்ஜ்களில் கட்டணங்கள் அதிகமாக வசூலிக்கப்பட்டது.

    பொதுமக்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்த ஆண்டு கோடை மழை கைகொடுத்ததால் கொடைக்கானல் மலைப்பகுதியில் மீண்டும் பசுமை ஏற்பட்டுள்ளது.

    மேலும் நகராட்சி நீர்தேக்கம் மற்றும் மனோரஞ்சிதம் அணை ஆகியவற்றின் நீர்மட்டமும் சீராக உயர்ந்து வருகிறது.

    விவசாயிகள் உருளைகிழங்கு, பீன்ஸ், கேரட், முட்டைகோஸ், சவ்சவ் உள்ளிடட காய்கறிகளை பயிரிட்டுள்ளனர். தற்போது பெய்துள்ள மழையால் அவை செழித்து வளர தொடங்கி உள்ளது. நேற்று 4 மணி நேரம் பலத்த மழை பெய்தது. சாரலாக தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது. இதனால் கொடைக்கானலில் குளிர்ச்சி அதிகமாக காணப்பட்டது.

    கோடை காலம் முடிந்த போதும் பகல் பொழுதில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் தற்போது பெய்த மழை பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விவசாயிகளும் விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

    நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தற்காலிக தீர்வு காணப்பட்டுள்ளது.

    கீழ்மலை பகுதிகளான பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, தாண்டிக்குடி ஆகிய பகுதிகளில் சாரல் மழையாக தொடங்கி 3 மணி நேரம் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    கொடைக்கானலில் இன்று 2 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. #Rain

    பெருமாள்மலை:

    தென் மேற்கு பருவமழையின் அறிகுறியாக கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வந்தது. மேலும் பகலில் நிலவும் வெப்பத்தின் தாக்கவும் குறைந்தே காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் குறைந்து இருந்தாலும் தற்போது பெய்து வரும் மழை குடிநீர் மற்றும் விவசாய தேவையை பூர்த்தி செய்யும் என பொதுமக்கள் நம்பிக்கை அடைந்துள்ளனர்.

    இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு லேசான சாரல் மழை பெய்தது. 10 மணிக்கு மேல் பலத்த சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது. இதனால் சாலையில் நடந்து செல்ல முடியாத படியும், வாகனங்களை ஓட்ட முடியாதபடியும் மக்கள் அவதியடைந்தனர்.

    காற்று பலமாக வீசியதால் நகர் முழுவதும் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. பெருமாள் மலை, பூலத்தூர், கூக்கால், மன்னவனூர் போன்ற கிராமங்களிலும் பலத்த மழை பெய்தது. 2 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையினால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

    மேல் மலை கிராமங்களில் பெய்த பலத்த மழையினால் பட்டானி, பீன்ஸ், உருளை போன்ற செடிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    பேரிஜம் ஏரிக்கு செல்லும் பகுதியில் மிகப் பெரிய மரம் முறிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து மரத்தை அறுத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். #Rain

    ×